Wednesday, 11 November 2020

2020 ஆம் ஆண்டின் கல்விக் கொள்கை

 




தேசிய கல்விக் கொள்கை என்பது கடந்த 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

அதன்பின் கடந்த 1986-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அடுத்தாற்போல் 1992-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டாலும் பெருமளவு மாற்றம் செய்யப்படவில்லை. அதன்பின் கடந்த 2016-ம் ஆண்டு மே 27-ம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. அதன் 2019-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்துள்ளது.

இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது.

அதில் உள்ள முக்கிய அம்சங்கள்;

  1. 21-வது நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கை இதுதான். கடந்த 1986-ம் ஆண்டிலிருந்து 34 ஆண்டுகளாக இருந்த கல்விக் கொள்கை மாற்றப்பட்டு இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  2. அங்கன்வாடியிலிருந்து மேல்நிலைக் கல்வி வரை மொத்த சேர்க்க விகிதத்தை 2030-ம் ஆண்டுக்குள் 100 சதவீதமாக்கவும், மற்ரும் 2025-ம் ஆண்டுக்குள் உயர்கல்வியில் மொத்த சேர்க்க விகிதத்தை 50 சதவீதமாகவும் உயர்த்தி கல்வியை உலக மயமாக்கல் செய்வதுதான் புதியக் கல்விக் கொள்கையின் நோக்கமாகும்.
  3. பள்ளியில் கற்றல் இடைநிற்றலில் இருந்து வெளியே சென்ற 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவது 2020 தேசிய கல்விக் கொள்கையின் இலக்காகும்.
  4. 10+2 என்ற பள்ளிப் பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 முதல் 11 வயது, 11 முதல் 14 வயது, மற்றும் 14-18 வயது ஆகிய மாணவர்களுக்காக பாடமுறை மாற்றப்படும். 12-ம் வகுப்பு வரை படித்தல், அங்கன்வாடிக்குச் செல்லுதல், ப்ரீ ஸ்கூலிங் ஆகியவையும் இதில் அடங்கும்.
  5. 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக ஆரம்பக் குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசிய பாடத்திட்ட மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை (NCPFECCE) என்சிஇஆர்டி உருவாக்கும்.
  6. அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவுக்கான தேசிய இயக்கத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் உருவாக்க தேசியக் கொள்கை வலியுறுத்தியுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து ஆரம்பப் பள்ளியிலும் கிரேட்-3 வகுப்புக்குள் உலகளாவிய அடித்தளக் கல்வியறிவு மற்றும் எண்ணிக்கையை அடைவதற்கான செயலாக்கத் திட்டத்தை மாநில அரசுகள் தயாரிக்கும்.
  7. மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரையில், தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும்
  8. தேசிய நூல் மேம்பாட்டுக் கொள்கை புதிதாக உருவாக்கப்படும்.
  9. 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு அந்தந்த உரிய வாரியம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படும். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு முறை தொடரும். ஆனால், முழுமையான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
  10. தேசிய மதிப்பீடு மையம், பராக் (PARAKH) (திறன் மதிப்பீடு, மதிப்பாய்வு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அறிவின் செயல்திறன் ஆய்வு) உருவாக்கப்பட்டு நிலையான அமைப்பாக மாற்றப்படும்.
  11. பிற்படுத்தப்பட்ட மண்டலங்கள், குழுக்களுக்குச் சிறப்புக் கல்வி மண்டலம் அமைத்தல், பாலினச் சேர்க்கை நிதி உருவாக்குதல் தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  12. ஒவ்வொரு மாநிலம், மாவட்டத்திலும் ‘பால பவன்’ உருவாக்க ஊக்கமளிக்கப்படும். பள்ளியின் பகல் பொழுது நேரத்தில் கைத்தொழில் கற்றல், வாழ்க்கைக்குத் தேவையான தொழில் கற்றல், விளையாட்டு தொடர்பான செயல்களில் ஈடுபட ‘பால பவன்’ உருவாக்கப்படும். இலவச பள்ளி உள்கட்டமைப்பை சமாஜிக் செட்னா கேந்திரங்களாகப் பயன்படுத்தலாம்.
  13. என்சிஇஆர்டி, எஸ்சிஇஆர்டி, அனைத்து மாநிலங்கள், மண்டலங்கள் அளவில் கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்களுடன் ஆலோசித்து, 2022-ம் ஆண்டுக்குள் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் உருவாக்கப்படும்.
  14. மாநில அளவில் பள்ளிகளுக்கான தர ஆணையம் (SSSA) மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் உருவாக்க வேண்டும். கல்வியில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடன் ஆலோசித்து, பள்ளி தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கட்டமைப்பை (SQAAF) எஸ்சிஇஆர்டி உருவாக்க வேண்டும்.
  15. தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 2018-ல் 26.3 சதவீதம் இருக்கும் நிலையில், அதை 2035-ம் ஆண்டில் 50 சதவீதமாக உயர்த்துதலும், உயர்கல்வியில் புதிதாக 3.50 கோடி இடங்கள் உருவாக்குவதும் தேசிய கல்விக் கொள்கையின் இலக்காகும்.
  16. உயர் கல்வியில் நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களின் ஆக்கபூர்வமான சேர்க்கைகள், தொழிற்கல்வி ஒருங்கிணைப்பு, தேவைப்படும் நேரத்தில் படிப்பை நிறுத்தி பொருத்தமான சான்றிதழ் பெறுதல், மீண்டும் படிக்க விருப்பப்படும்போது எளிதான சேர்க்கை, எனப் பரந்த அடிப்படையில் பன்முக முழுமையான இளநிலை பட்டக்கல்வியை இந்த தேசியக் கொள்கை வழங்குகிறது.
  17. பல்வேறு உயர்கல்விகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை டிஜிட்டல் முறையில் சேமிக்க அகாடமி ஆஃப் கிரெடிட் என வங்கி உருவாக்கப்படும். மாணவர்கள் பல்வேறு நிலைகளில் பெறும் மதிப்பெண்கள் அவர்களின் கல்வியாண்டின் இறுதியில் சேர்க்கப்படும்.
  18. ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றுக்கு இணையாக உலகளாவிய தரத்தில் சிறந்த பன்முகக் கல்வியைக் கற்பிக்கும் பன்முகக் கல்வி மற்றும் ஆய்வு பல்கலைக்கழகங்களை நாட்டில் உருவாக்குதல்.
  19. ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் உயர்கல்வியில் ஆராய்ச்சித் திறனை வளர்ப்பதற்கும் தேசிய ஆய்வு அமைப்பு (எம்இஆர்யு) உருவாக்கப்படும்.
  20. மருத்துவம், சட்டம் தவிர்த்து அனைத்து உயர் கல்வியையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவர இந்திய உயர்கல்வி ஆணையம் (ஹெச்இசிஐ) உருவாக்கப்படும்.
  21. பொது மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஒரே சீரான விதிமுறைகளால் நிர்வகிக்கப்படும். அங்கீகாரம் வழங்குதலும், மற்றும் கல்வித் தரம் நிர்ணயித்தலும் சீராக இருக்கும்.
  22. அடுத்த 15 ஆண்டுகளில் கல்லூரிகளின் இணைப்பு நீக்கப்பட்டு, கல்லூரிகளுக்கு சுயாட்சி வழங்குவது குறித்து படிநிலை கொண்ட செயல்முறை உருவாக்கப்படும்.
  23. ஆசிரியர் கல்விக்கான புதிய, முழுமையான தேசிய அளவில் பாடத்திட்டம் (என்சிஎப்டிஇ) வகுக்கப்படும். என்சிஇஆர்டி, என்சிடிஇ ஆகியவற்றின் ஆலோசனையில் இந்தப் பாடத்திட்டம் அமையும்.
  24. 2030-ம் ஆண்டுக்குள் பள்ளியில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதி என்பது 4-ஆண்டு ஒருங்கிணைந்த பிஎட் முடித்து இருப்பது கட்டாயமாக்கப்படும்.
  25. தரமற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  26. பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரி ஆசிரியர்களுக்குத் தொழில்ரீதியாக நீண்டகாலம் மற்றும் குறுகிய காலத்தில் பயிற்சி, ஆலோசனைகள் அளிக்கும் வகையில், திறன்வாய்ந்த திறமையை ஓய்வுபெற்ற முன்னாள் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழு உருவாக்கப்படும். இந்தக் குழுவுக்கு தேசிய கற்பித்தல் குழு என்று பெயரிடப்படும்.
  27. கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் வளர்ச்சியைக் கண்டறிய தேசிய கல்வி உதவித்தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  28. தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களுக்கு அதிகமான அளவில் ஊக்கத்தொகை அளிக்க ஊக்குவிக்கப்படுவர்.
  29. ஆன்லைன் படிப்புகள் மற்றும் டிஜிட்டல் களஞ்சியங்கள், ஆராய்ச்சிக்கான நிதி, மேம்பட்ட மாணவர் சேவைகள், தொலைத்தூரக் கல்விக்கான (MOOC) கிரெடிட் அடிப்படையிலான அங்கீகாரத்துடன் தொலைதூரக் கல்வி மிக உயர்ந்த தரமான பாடத் திட்டங்களுடன் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  30. தொற்றுநோய், பெருந்தொற்று நோய் காலத்தில், எப்போதெல்லாம், எங்கெல்லாம் பாரம்பரிய கல்விமுறை சாத்தியமில்லாதபோது, தரமான மாற்றுக் கல்வி முறையை உருவாக்க, ஆன்லைன் கல்வியை மேம்படுத்த முழுமையான பரிந்துரைகள் உருவாக்கப்பட உள்ளன.
  31. பள்ளி மற்றும் உயர்கல்வித் துறை தேவையறிந்து டிஜிட்டல் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் உள்ளடக்கம், திறனை வளர்க்க புதிய அமைப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உருவாக்கும்.
  32. தேசிய கல்வி தொழில்நுட்பக் கூட்டமைப்பு (NETF) எனும் தன்னாட்சி அமைப்பு, உருவாக்கப்படும். இந்த அமைப்பின் மூலம், கற்றல், மதிப்பீடு, திட்டமிடல், நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த கருத்துகளை இலவசமாகப் பரிமாறிக் கொள்வதற்கான தளமாக இது அமையும்.
  33. இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் விளக்க அமைப்பு (ஐஐடிஐ), பாலி, பெர்ஸியன், பிரகாரித மொழிக்கான கல்வி நிறுவனம் உருவாக்குதல், உயர்கல்வியில் சமஸ்கிருதம் உள்ள அனைத்து மொழி தொடர்பான துறைகளையும் வலுப்படுத்துதல், அதிகமான உயர்கல்வி திட்டங்களில் தாய்மொழி, உள்ளூர் மொழியில் கற்றலை ஊக்குவித்தல் போன்றவற்றை தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.
  34. கல்வியில் உலகமயமாக்கலுக்கு வசதி செய்துதர வேண்டும். இதன்படி, உள்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுதல், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு எளிதாகச் சேர்தலுக்கு வாய்ப்பு ஏற்படுத்துதல், உலகத் தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளை அமைக்க வாய்ப்பளித்தலாகும்.
  35. பிரத்யேகமான தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள், சுகாதார அறிவியல் பல்கலைக்கழங்கள், வேளாண், சட்டப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைப் பன்முக நிறுவனங்களாக மாறுவதை இலக்காக வைத்தல்.
  36. தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் இளைஞர்களும், பதின்பருவத்தினரும் 100 சதவீதம் கல்வியறிவு பெறுதலாகும்.
  37. தேசிய கல்விக் கொள்கையின்படி எம்.ஃபில் படிப்பு கைவிடப்படுகிறது.
  38. 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தாய்மொழி அல்லது உள்ளூர் மொழி அல்லது பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
  39. மாணவர்கள் இயந்திரத்தனமாகக் கற்காமல், அவர்களுக்கு நடத்தும் தேர்வுகள் அவர்களின் அறிவாற்றலைப் பரிசோதிக்கும் வகையில் இருக்கும்.
  40. மாணவர்களின் பள்ளிப் பாடங்கள் அளவு குறைக்கப்படும். 6-ம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவார்கள்
  41. மதிப்பெண் மற்றும் அறிக்கையாக மாணவர்களின் ரிப்போர்ட் கார்டு இருப்பதற்குப் பதிலாக, மாணவர்களின் திறன், திறமையை வெளிப்படுத்துவதாக அமையும்.
  42. தனியார் மற்றும் அரசு உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் பொதுவான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.
  43. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
  44. நாட்டில் தற்போது 45 ஆயிரம் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் இருக்கின்றன. கல்லூரிகளுக்கு நிதி சுயாட்சி, நிர்வாகம், கல்வியில் சுயாட்சி போன்ற உரிமைகள் போன்றவை அவர்களின் தரத்துக்கு ஏற்ப வழங்கப்படும்.
  45. பிராந்திய மொழிகளில் ஆன்லைன் பாடப்பிரிவுகள் உருவாக்கப்படும். விர்ச்சுவல் லேப் உருவாக்கப்படும், தேசியக் கல்வி தொழில்நுட்பக் கூட்டமைப்பு உருவாக்கப்படும்.
  46. குறிப்பிட்ட குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எவ்வாறு பயிற்றுவிப்பது தொடர்பாக அனைத்து ஆசிரியர் கல்வித் திட்டத்திலும் பாடமாகச் சேர்க்கப்படும்.
  47. மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் தடையில்லாமல் அனைத்து கல்வி வசதிகளையும் பெற முடியும்.
  48. சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் கற்பதற்காக பிரத்தேய கருவிகள், தொழில்நுட்ப அடிப்படையிலான கருவிகள், மொழி அடிப்படையில் கற்றல் கருவிகள் வழங்கப்படும்.
  49. மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஒருங்கிணைத்தல், அவர்களுக்காகச் சிறப்பு பயிற்றுனர்களைச் சேர்த்தல் மற்றும் வளர்ச்சிக்கான மையங்களை நிறுவுவதற்காக பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
  50. மாற்றுத்திறனாளி உரிமைச் சட்டத்தின் கீழ் குறைபாடுள்ள குழந்தைகள், வழக்கமான பள்ளிக்குச் செல்வது, அல்லது சிறப்புப் பள்ளிக்குச் சென்று படிப்பதை அவர்களின் விருப்பப்படி தேர்வு செய்யலாம்.

1 comment:

  1. Nice Post. I was checking constantly this blog and I am impressed! Very useful info specifically the last part ?? I care for such information much. Thank you and good luck.
    Best Packers and Movers Services in Old City
    Packers and Movers in Old City
    Best Packers and Movers in India

    ReplyDelete